சீற்றம் கிளப்பும் சரித்திர திருத்தங்கள் !
'கடந்த சில ஆண்டுகளாக மதச்சார்பின்மைக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் சீரழிக்கப்படுகின்றன.
உண்மையான கல்வி அறிஞர்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள். கல்வித் துறையே காவி மயமாக்கப்படுகிறது. பாடப் புத்தகங்களில் வரலாற்றை திரித்து எழுதுகிறார்கள்' என்று ஆவேசமாக வெடித்திருக்கிறார் சோனியா காந்தி.
உண்மையான கல்வி அறிஞர்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள். கல்வித் துறையே காவி மயமாக்கப்படுகிறது. பாடப் புத்தகங்களில் வரலாற்றை திரித்து எழுதுகிறார்கள்' என்று ஆவேசமாக வெடித்திருக்கிறார் சோனியா காந்தி.
அலிகார் பல்கலைக்கழகத்தில், 'நேருவும் தேசியவாதமும்' என்ற தலைப்பில் கடந்த வாரம் பேச வந்தபோதுதான் இப்படி சீறித் தள்ளினார் சோனியா.
இதே விஷயத்தை கம்யூனிஸ்ட் தலைவர்களும் எதிரொலித்தபடி இருக்கிறார்கள்.
இதே விஷயத்தை கம்யூனிஸ்ட் தலைவர்களும் எதிரொலித்தபடி இருக்கிறார்கள்.
"வரலாற்றையே மாற்றி எழுதுவது வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்" என்று 'இந்திய வரலாற்றுப் பேராயம்' என்ற அமைப்பும் கண்டிக்கிறது. 'தமிழக வரலாற்றுப் பேராயம்' என்ற அமைப்பும் இதே குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது.
அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் என மொத்தப் பேரும் சேர்ந்து எதிர்ப்புக் காட்டக் காரணம் - என்.சி.இ.ஆர்.டி. (NCERT) வெளியிட்டிருக்கும் வரலாற்று பாடப் புத்தகங்கள்.
கல்விக் கொள்கை களை உருவாக்கும் மத்திய அரசின் உயர் நிறுவனங் களில் ஒன்றுதான் என்.சி.இ.ஆர்.டி. 'கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கழகம்' என்று இதற்குப் பெயர். இவர்கள் வெளியிடும் பாடப்புத்தகங்கள்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடமாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ். போன்ற மதிப்பிற்குரிய தேர்வுகளை எழுதுபவர்களும்கூட என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களைத்தான் படித்துத் தயாராவார்கள்.
ஆறாம் வகுப்புக்கு 'இந்தியாவும் உலகமும்' என்ற புத்தகத்தையும் பதினோராம் வகுப்புக்கு, 'பண்டைய இந்தியா', 'இன்றைய இந்தியா', 'மத்திய கால இந்தியா' என்ற மூன்று புத்தகங்களையும் கடந்த ஆண்டு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டபோதே சலசலப்பு கிளம்பியது.
சமீபத்தில் ஏழு, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான மூன்று வரலாற்றுப் புத்தகங்கள் வெளியாக.. அவை லேட்டஸ்ட் புயலுக்குக் காரணமாகி விட்டன.
சென்னையில் 'சுயமரியாதை இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில் கடந்த சனிக்கிழமை கூடிய கல்வியாளர்கள் கூட்டம், இந்தப் புத்தகங்களை கடுமையாக கண்டித்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜெகதீசன் பேசும்போது, "வரலாற்றை திரித்து எழுதுவது புதிதல்ல. ஆனால், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு தங்களின் நோக்கத்துக்காக வேண்டுமென்றே இதை செய்யத் தொடங்கியிருக்கிறது. உண்மைகளை மறைப்பது, இடைச் செருகல் செய்வது, தீர்மானமான சில உண்மைகளை மேலோட்டமாக மழுப்புவது என்று மூன்று விதமான தவறுகள் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் நடந்திருக்கிறது.
'இந்திய வரலாற்று காங்கிரஸ்' என்ற அமைப்பு எழுபது ஆண்டுகளாக இருக்கிறது. வரலாற்றில் எது உண்மை, எது தவறு என்று தீர்மானிக்க முழுத் தகுதியுள்ள அமைப்பு அதுதான். அந்த அமைப்பு, இந்தப் புத்தகங்களை முழுமையாக நிராகரித்துள்ளது. வகுப்பறைகளில் இதுபோன்ற திரிபுகளை அனுமதிப்பது, பெரும் கலாசார கலவரத்தையே உருவாக்கிவிடும்" என்றார்.
அதற்குப் பிறகு பேசிய பேச்சாளர்கள் அனைவரும், இந்த புத்தகங்களில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டார்கள்.
"பி.ஜே.பி. அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தங்களது ஆட்களைப் புகுத்தியது. தங்கள் கொள்கைக்கு விரோதமான விஷயங்கள் என்பதால், 41 தகவல்களை என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் இருந்து நீக்கினார்கள். அடுத்து பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவிகளை வைத்து புதிய புத்தகங்களை எழுத வைத்தார்கள். அபத்தமான இந்த புத்தகங்களில் ஆபத்தான பல விஷயங்கள் இருக்கின்றன" என்றார் சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் அ. மார்க்ஸ்.
"முதல் சுதந்திரப் போராட்டத்தில் தொடங்கி (1857), நவீன இந்திய வரலாறு வரை எழுதியிருக்கும் நூலாசிரியர் 1954-ம் ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறார். அதற்குப் பிறகு எழுதினால், அவர்களுக்கு பிடிக்காத நேரு பற்றிச் சொல்ல வேண்டும். அதற்காகவே வரலாற்றை அத்துடன் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், 96-ல் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் உட்கார்ந்தது பற்றி இந்தப் புத்தகத்தில் வருகிறது. முந்தைய பி.ஜே.பி. ஆட்சி கவிழ்ந்தது பற்றி சொல்லும்போது, 'துரதிர்ஷ்ட வசமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடிய வில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நடுநிலையாக வரலாற்றைச் சொல்லவேண்டிய புத்தகத்தில் 'துரதிர்ஷ்ட வசமாக' என்ற தனி மனித உணர்வு தேவையா?
தனிநபர் சத்தியாக்கிரகம் பற்றிச் சொல்லும் போது, முதல் சத்தியாக்கிரகி வினோபாபாவே என்று இருக்கிறது. அதற்கு பிறகு வரிசையாக வரும் தலைவர்களின் பெயர்களில் நேரு இல்லை!
நேரு பெயரை மறைக்கும் இந்த புத்தகங்கள் காந்தியையும் கொச்சைப்படுத்துகின்றன. 'கோபால கிருஷ்ண கோகலேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்ட காந்தி, 1915-18 ஆண்டுகளில் இந்திய அரசியலுக்காக எந்தப் பங்கையும் ஆற்றவில்லை' என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவின் சூழல் எப்படியிருக்கிறது என்று காந்தியை ஆய்வு செய்யச் சொல்கிறார் கோகலே. இதற்காக காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்த காலகட்டத்தில் காந்தி சும்மா இருந்தார் என்று சொல்ல முடியாது. பீகார், குஜராத், அகமதாபாத் ஆகிய மூன்று இடங்களில் நடந்த போராட்டத்துக்கு காந்திதான் தலைமை வகித்தார்.
இப்படி பி.ஜே.பி-க்கு யார் யாரெல்லாம் பிடிக்காத தலைவர்களோ அவர்களை கொச்சைப்படுத்தி பாடப்புத்தகங்களை தயார் செய்திருக்கிறார்கள்" என்றும் சொன்னார் அ.மார்க்ஸ்.
இந்தக் கூட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் வீ.அரசு பேசினார்.
"சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றித்தான் இதுவரை படித்திருக்கிறோம். ஆனால், இதை 'சிந்து-சரஸ்வதி நாகரிகம்' என்று பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள். சரஸ்வதி நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் ஒன்று. வரலாற்றை உறுதியான ஆதாரங்களை வைத்து எழுத வேண்டுமே தவிர, சில நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதக் கூடாது.
இந்தியாவைப் பலவீனப்படுத்தியவர் அசோகர் என் றும், மத நல்லிணக்கத்தை உருவாக்கப் பாடுபட்ட அக்பரை 'தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்' என்றும் எழுதுகிறார்கள். அடுத்தகட்டமாக மதரீதியான நேரடிப் பிரசாரமும்கூட அடுத்த ஆண்டு புத்தகத்தில் வந்துவிடும் போலிருக்கிறது" என்று முடித்தார் அரசு.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாதிக் பேசும்போது,
"ஒன்பதாம் வகுப்புக்கான 'இன்றைய இந்தியா' புத்தகத்தின் முதல் பதிப்பில், காந்தி கொலை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இரண்டாம் பதிப்பில், 'வழிபாட்டுக் கூட்டம் ஒன்றுக்குச் செல்லும் வழியில் நாதுராம் கோட்ஸே என்பவ ரால் காந்தி கொல்லப்பட்டார்' என்று போகிற போக்கில் ஒப்புக்குச் சேர்த்திருக்கிறார்கள். காந்தி படுகொலை என்பது இவ்வளவு சுருக்கமாக தாண்டிப் போக வேண்டிய வரலாற்று நிகழ்வா? விட்டால், 'காந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்' என்றுகூட அடுத்த பதிப்பில் எழுதிவிடுவார்கள்" என்ற வேதனைப்பட்ட சாதிக்,
"இதையெல்லாம் தட்டிக் கேட்டு ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள் சிலர். நாமும் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டுவோம். வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் நல்ல தீர்ப்பு வரவில்லை என்றால், தெருவில் இறங்கி நான் போராடப் போகிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டார்.
என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டிருக்கும் ஏழு வரலாற்றுப் புத்தகங்களிலும் என்னென்ன பிழைகள், திரிபுகள் இருக்கின்றன என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இதுபற்றி ஆராய்ச்சி செய்ய, தமிழகக் கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப் பவும் தயாராகிறது.
இதற்கிடையில் இந்தப் புத்தகங்களில் வரலாற்றுத் திரிபு எதுவும் செய்யப்பட வில்லை என்று வாதிடவும் கல்வியாளர்களிலேயே இன்னொரு தரப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.
ப. திருமாவேலன்
படங்கள்: பொன். காசி
நன்றி: ஜூனியர் விகடன் 31-12-03
No comments:
Post a Comment