கட்டுரை தொகுப்பு

படித்த பிடித்த கட்டுரைகளின் தொகுப்பு

Saturday, January 28, 2012

சூடாகிறார் 'கிங் மேக்கர்' சோ!

போயஸ் பூகம்பம்... சூடாகிறார் சோ சமஸ் படங்கள் : வி.செந்தில்குமார் தமிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ. 'துக்ளக்’ ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே? ''சோவுக்கு கிங் மேக்கர் ஆகும் ஆசை வந்துவிட்டதா?'' ''நான் கிங் மேக்கர் என்றால், கிங் யார்? நீங்கள் மோடியையும் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், ஒருவர் கிங், இன்னொருவர் க்வீன் அல்லவா? (சிரிக்கிறார்). நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைக் கூறி இருக்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்கு வதில் முட்டுக்கட்டை ஏற்பட் டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!'' ''இந்தியா போன்ற பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர மோடி தகுதி ஆனவர் என நினைக்கிறீர்களா?'' ''குஜராத்தும் பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு மாநிலம்தான். அங்கும் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு சாதியினர் இருக்கத் தான் செய்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றி இருக்கிறார். மோடியின் சாதனைகள்தான் அவரை முன்னிறுத்துகின்றன.'' ''மோடி பிரதமரானால், குஜராத்தில் நடந்த வெறியாட்டங்கள் இந்தியா முழுக்க நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?'' ''மதக் கலவரங்கள் என்பது குஜராத்தில் மட்டும்தான் நடந்தது என்பது போல் பேசுவது போலித்தனம். இந்தியப் பிரிவினையில் தொடங்கி எடுத்துக் கொண்டால், எல்லா மாநிலங்களிலும், எல்லாக் கால கட்டங்களிலும் மதக் கலவரங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைக் காட்டிலும் மோசமான கலவரங்கள், அதற்கு முன்போ, பின்போ நடந்தது இல்லை. கோத்ரா ரயில் எரிப்பை மறந்துவிட்டு குஜராத் கலவரங்களைப் பற்றிப் பேசுவது அர்த்தம் அற்றது. அந்தக் கலவரங்கள் கண்டிக்கத் தக்கவை. ஆனால், அதற்குக் காரணம் மோடி அல்ல. கலவரங்களை அடக்கத் துளியும் தாமதிக்காமல் ராணுவத்தை அழைத்தவர் அவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!'' ''அத்வானியை வைத்துக்கொண்டே மோடியைப் பிரதமராக்க நீங்கள் விடுத்த அழைப்பு, உங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ். விடுத்த மறைமுகச் செய்தியா?'' ''ஆர்.எஸ்.எஸ். அத்வானியிடம் எதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அதைச் சொல்ல அவர்களிடமே எவ்வ ளவோ தலைவர்கள் இருக்கிறார்கள். போயும் போயும் என்னிடம் சொல்லி அனுப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.'' ''ஒருகாலத்தில் ஊழல் அற்ற நிர்வாகம் என்று சொல்லித்தான் பா.ஜ.க-வை முன்னிறுத்தினீர்கள். ஆனால், இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர்நாடகத்தை மாற்றிவிட்டது பா.ஜ.க. இனியும் எப்படி பா.ஜ.க-வைத் தாங்கிப் பிடிப்பீர்கள்?'' ''பா.ஜ.க-வில் நீங்கள் இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம்சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பா.ஜ.க- தானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பா.ஜ.க-வின் பெரும் பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகார் களிலும் சிக்காதவர்கள். ஆனால், காங்கி ரஸில் அப்படிச் சொல்ல முடியாது.'' ''சரி, ஜெயலலிதாவை எந்த அடிப்படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துகிறீர்கள்?'' ''இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது. ஒருமைப் பாட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருக் கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அதிகாரிகளே மெச்சும் சிறந்த நிர்வாகி. உள்நாட்டுப் பாதுகாப்பிலும் வெளியுறவு விவகாரங்களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது. நினைத்ததைச் சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது. மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரதமரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.'' ''ஜெயலலிதாவின் கடந்த 9 மாத ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ''ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. அதற்கு ஓர் ஓட்டுநரை அமர்த்துகிறீர்கள். அவர் அந்த வண்டியின் இன்ஜினைக் குட்டிச் சுவர் ஆக்குகிறார். போதாக்குறைக்கு அவருடைய குடும்பத்தினர் வண்டியின் மற்ற பாகங்கள் அனைத்தையும் பாழாக்குகிறார்கள். வண்டி நகரவே மறுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வண்டியை ஓட்ட இன்னொரு ஓட்டுநரை நியமிக்கிறீர்கள். அவர் எப்படி வண்டியை உடனே ஓட்டுவார் என்று எதிர்பார்க்க முடியும். அவர் முதலில் பழுதுபார்க்க வேண்டும் அல்லவா? அந்தப் பணிதான் இப்போது நடக்கிறது.'' ''தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி, அண்ணா நூலக மாற்றம், விலைவாசி உயர்வு, அமைச்சர், அதிகாரி கள் மாற்றக் குளறுபடிகள்... எல்லா வற்றையும் இப்படித்தான் பார்க்கிறீர் களா?'' ''ஆமாம். தலைமைச் செயலக மாற்றம் நிர்வாகரீதியில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. ஆனால், அண்ணா நூலக மாற்றம் தேவையற்றது. அதனால், பலர் பயன் அடைந்துவருகிறார்கள். சமச்சீர்க் கல்வியைப் பொறுத்த அளவில் அது சமச்சீர்க் கல்வி அல்ல; சமத் தாழ்வுக் கல்வி என்று ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். அது நிச்சயம் மாற்றப்பட வேண்டியதுதான். விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை. கலைஞர் ஆட்சி உட்பட. ஏனென்றால், விலைவாசியைத் தீர்மானிக் கும் முக்கியக் காரணிகள் மத்திய அரசிடம் இருக்கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல. அதிகாரிகள், அமைச்சர் கள் மாற்றம் என்பது ஒரு நிர்வாகத்தைச் செம்மையாக்குவதற்காக ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கை. பரம்பரைக் குத்தகைதாரர்கள்போல, தி.மு.க. ஆட்சியில், ஜில்லாவுக்கு ஓர் அமைச்சர், தன் தலைவரைப் போலவே அந்தந்த ஜில்லாக்களில் அவர்கள் பதவிக்குக் கொண்டுவரும் தன்னுடைய வாரிசுகள், அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள்... இப்படித்தான் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்குப் பொருத்தமானவர் ஜெயலலிதா அல்ல!'' ''ஜெயலலிதா எப்போதுமே தமிழ்த் தேசியவாதி கள், ஈழத் தமிழ்ப் போராளிகள் ஆகியோருக்கு எதிராகவே இருந்திருக்கிறார். ஆனால், அவருடைய சமீப கால நடவடிக்கைகள் அப்படி இல்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ''தனித் தமிழ்நாடு வேண்டும் என்றோ, இலங்கை பிரிய வேண்டும் என்றோ, விடுதலைப் புலிகள் சரி என்றோ, வன்முறை தீர்வு என்றோ அவர் கூறிவிடவில்லை. தமிழர்கள் நலன் முக்கியம் என்று பேசுகிறார் அவ்வளவுதானே? இதில் என்ன நிலைப்பாடு மாற்றம் இருக்கிறது?'' ''ஜெ.- சசி பிரிவு உண்மைதானா?'' ''அது உண்மை என்றே அவர்களுடைய கட்சிக்காரர்களும் அவர்களைச் சுற்றி இருப்ப வர்களும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள்.'' ''சசிகலா நீக்கத்துக்கு என்ன காரணம்?'' ''எனக்குத் தெரியாது. நான் ஜெயலலிதா வையோ, அ.தி.மு.க-வையோ தூரத்தில் இருந்துதான் பார்க்கிறேன். அந்தப் பார்வையில் எனக்குத் தெரிவது... கட்சியைச் சீராக்கவும் நிர்வாகத்தைச் செம்மையாக் கவும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற் பட்ட சக்திகள் ஆட்சியில் குறுக்கிடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடடிக்கை யாக இது இருக்கலாம்.'' ''ஜெயலலிதாவையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான 'பார்ப்பன லாபி’யின் சதிதான் சசிகலா நீக்கம் என்றுசொல்லப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' ''நீங்கள் சொல்வதுபோல வைத்துக் கொண்டால், நான் அ.தி.மு.க-வைக் கைப் பற்றிவிடுவேன். அவர்களுடைய தலைவ னாகிவிடுவேன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் என்னைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படி எல்லாம் நான் நம்ப வேண்டும். நீங்களே சொல்லுங் கள்... அவ்வளவு பெரிய மடை யனா நான்? ஒரு லாபி என்றால், அதில் சில பேர் இருக்க வேண்டும். அப் படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை. மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய்... இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். இவர்கள் எல்லோருமே பிராமணர்களா? அப்போது எல்லாம் இந்தப் 'பார்ப்பன லாபி’ குற்றச் சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து முளைக்கிறது?'' ''சோ ஓர் அரசியல் விமர்சகர் என்று இருந்த நிலை மாறி, அவர் ஓர் அரசியல் தரகர் என்று உங்களைப் பற்றிப் பேசப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' ''எதைவைத்து இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் அமைய நான் பணியாற்றி இருக்கிறேன் என்ற அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வேலை நான் இப்போது தொடங்கியது அல்ல. காமராஜர் காலத்திலேயே செய்தது. மத்தியில் ஜனதா, ஆந்திரத்தில் என்.டி.ஆர்., கர்நாடகத்தில் ஹெக்டே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா என்று எத்தனையோ பேருக் காக கூட்டணியை உருவாக்க உழைத்திருக்கிறேன். இதற்கு என்ன அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் ஆட்சி வர நான் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று சொல்லலாம். உங்கள் நண்பர் விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அவர் உங்களிடம் வாக்கு கேட்டால், அவரைத் தரகர் என்று நீங்கள் கூறுவீர்களா... எனக்குத் தெரியாது. ஆனால், தரகில் நல்ல காரியம் நடந்தால், நான் செய்வது தரகு வேலையாகவே இருக்கட்டும். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், துரோக வேலை செய்யாதவரை நீங்கள் என்னைக் குறைகூற முடியாது!'' ''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?'' ''எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!'' ஆனந்த விகடன் 01-பிப்ரவரி -2012

Saturday, March 10, 2007

மஹாராஷ்டிரா குண்டுவெடிப்புகள்: சங் பரிவாரின் முகமூடி கிழிகிறது!

மஹாரஷ்டிராவில் அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் RSS உள்ளிட்ட சங் பரிவார சக்திகள் என்பதற்கான அதிக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராகுல் மோகன் என்பவரை உண்மை அறியும் மயக்கநிலை சோதனைக்கு (Narco Analysis Test) உட்படுத்திய போது அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல விவரங்கள் வெளிப்பட்டுள்ளன.

நாந்தேட் குண்டு வெடிப்பு அல்லாமல் ஜல்னா, புர்னா, பர்ஃபானி பள்ளிவாசல்களில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் தனக்கு பங்குள்ளதை ராகுல் ஒத்துக் கொண்டுள்ளார். வெடிகுண்டு தயார் செய்வதற்காக தனக்கு 45,000 ரூபாய் கிடைத்ததாகவும் ராகுல் ஒத்துக் கொண்டுள்ளார். RSS - பஜ்ரங்தள் அமைப்புகளின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் பிரச்சாரகர்கள் மூலமாக தனக்கு அப்பணம் கிடைத்ததாகவும் கூறினார். வெடிகுண்டு தயார் செய்வதற்கான அப்பணத்தை மூன்று அரசியல் தலைவர்கள் கொடுத்து விட்டதாக ராகுல் இச்சோதனையின் போது கூறியிருந்தாலும் அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க இதுவரை காவல்துறையால் முடியவில்லை என நாந்தேட் குண்டுவெடிப்புகள் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தி வரும் கமிட்டி சேர்மன் நீதிபதி கோல்சே பாட்டீல் அறிவித்தார்.

இந்த தலைவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்கவும், மும்பை, மாலேகாவ் தொடங்கிய குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் நடந்த சதியாலோசனைகளை வெளிக்கொணரவும் நீதித்துறை (Judicial) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசிடம் அவர் கோரினார். நாந்தேட் விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்காக "வகுப்புவெறி எதிர்ப்பு (Communalism Combat) மராத்தி பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு" நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது முன்னாள் நீதிபதியான கோல்ஸே இவ்வாறு கூறினார். அமைக்கப்படும் உயர்மட்ட விசாரணைக் குழுவில் தேசிய மனித உரிமை கழக அங்கத்தினர், நடுநிலை சமூக சேவையினர் போன்றவர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் கோல்சே கூறினார்.

நீதிபதி கோல்சே, நாக்பூர் RSS அலுவலகத்தில் போலியாக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னால் இருந்த RSS - காவல்துறை சதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் ஆவார்.

வெடிகுண்டு தயார் செய்யும் பொழுது நிகழ்ந்த தவறே நாந்தேட் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், நாந்தேட் குண்டுவெடிப்பை "பட்டாசு தொழிற்சாலையில் நடந்த ஒரு சாதாரண விபத்து" என்று கூறி காவல்துறை சம்பவத்தை மூடி மறைக்க முயன்றது சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காகவே ஆகும். இது மீண்டும் ஒரு சங் பரிவார - காவல்துறை மறைமுக தொடர்புகளுக்கான ஆதாரமாகும். சங் பரிவாரத்துடன் மறைமுகமாக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் உளவுத்துறை (Intelligence Bureau) குண்டு வெடிப்புகள் தொடர்பாகவும், தேசவிரோத செயல்கள் தொடர்பாகவும் கடந்த 60 வருடங்களாக அரசுக்கு தவறான விவரங்களை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பதாகவும் நீதிபதி கோல்சே சுட்டிக்காட்டினார்.

நாந்தேட் குண்டு வெடிப்பு குறித்த உண்மைகளை வெளியில் கூறுவதற்கு பொதுமக்கள் அஞ்சுவதாக விசாரணை கமிட்டி வழிநடத்துனர் (Convener) டீஸ்தா ஸெற்றல்வாத் கூறினார். மேலும், "பரிசோதனைக் குழுவின் அறிக்கை வெளிவரும் முன்பே 'சம்பவத்திற்கு பட்டாசு வெடிப்பு தான் காரணம்' என காவல்துறை அவசர கதியில் பத்திரிக்கையாளர்களிடம் செய்தி கொடுத்தமைக்குப் பின்னால் நிச்சயம் ஏதோ ஒரு சதி உள்ளது. சம்பவத்தில் வெடித்த குண்டின் வீரியத்தால் கிட்டங்கியின் கதவுகள் (Godown Shutters) 40 அடி தூரத்திற்கு வெடித்து சிதறியது சம்பவத்திற்கு பட்டாசு வெடிப்பு காரணமாக இருக்க இயலாது என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மேலும் சம்பவ இடத்தில் ஒரு பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாக அங்கு குடியிருக்கும் மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதும் மிக முக்கிய ஆதாரமாகும்" எனவும் டீஸ்தா கூறினார்.

ராகுல் மோகனுக்கு நடத்தப்பட்ட டெஸ்டின் மூலம் வெளிப்பட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய விஷயங்களின் அடிப்படையில் RSS, பஜ்ரங்தள், வி.இ.ப, இந்து மகா சபை, சிவசேனா போன்றவைகளை தீவிரவாத இயக்கங்களாக அறிவித்து அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் விசாரணைக் கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. நாந்தேட் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை கமிட்டி 5 தினங்களாக நடத்திய விசாரணை அறிக்கையை வரும் தினங்களில் அரசுக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நடக்கும் எல்லாவிதமான குண்டுவெடிப்பு அசம்பாவிதங்களுக்கும் பின்னால் ஏதாவது முஸ்லிம் குழுக்களே இருப்பதாக கடந்த காலங்களில் வலிந்து திணிக்கப்பட்டு "தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இஸ்லாம்" என்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் பின்னணியிலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 60 வருடங்களாக இந்திய புலன்விசாரணைக் குழுவில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படாததும், காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய துறைகளில் முஸ்லிம்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதிலும் ஒரு நீண்டகால திட்டமிட்ட சதிச்செயல் இருப்பது தற்போது வெளிவரும் தகவல்களின் மூலம் சிறிது சிறிதாக உறுதிபடுத்தப்படுகிறது.

புதன், 07 மார்ச் 2007

நன்றி: சத்திய மார்க்கம்

தொடர்புடைய இதர சுட்டிகள்:
முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள்!
ரகுநாத் கோவில் தாக்குதல்: குற்றவாளிகள் யார்?

Friday, March 9, 2007

அமுக்கப்பட்ட நேரு..திரிக்கப்பட்ட காந்தி!

அமுக்கப்பட்ட நேரு..திரிக்கப்பட்ட காந்தி!
சீற்றம் கிளப்பும் சரித்திர திருத்தங்கள் !

'கடந்த சில ஆண்டுகளாக மதச்சார்பின்மைக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் சீரழிக்கப்படுகின்றன.
உண்மையான கல்வி அறிஞர்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள். கல்வித் துறையே காவி மயமாக்கப்படுகிறது. பாடப் புத்தகங்களில் வரலாற்றை திரித்து எழுதுகிறார்கள்' என்று ஆவேசமாக வெடித்திருக்கிறார் சோனியா காந்தி.

அலிகார் பல்கலைக்கழகத்தில், 'நேருவும் தேசியவாதமும்' என்ற தலைப்பில் கடந்த வாரம் பேச வந்தபோதுதான் இப்படி சீறித் தள்ளினார் சோனியா.
இதே விஷயத்தை கம்யூனிஸ்ட் தலைவர்களும் எதிரொலித்தபடி இருக்கிறார்கள்.

"வரலாற்றையே மாற்றி எழுதுவது வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்" என்று 'இந்திய வரலாற்றுப் பேராயம்' என்ற அமைப்பும் கண்டிக்கிறது. 'தமிழக வரலாற்றுப் பேராயம்' என்ற அமைப்பும் இதே குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது.

அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் என மொத்தப் பேரும் சேர்ந்து எதிர்ப்புக் காட்டக் காரணம் - என்.சி.இ.ஆர்.டி. (NCERT) வெளியிட்டிருக்கும் வரலாற்று பாடப் புத்தகங்கள்.

கல்விக் கொள்கை களை உருவாக்கும் மத்திய அரசின் உயர் நிறுவனங் களில் ஒன்றுதான் என்.சி.இ.ஆர்.டி. 'கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கழகம்' என்று இதற்குப் பெயர். இவர்கள் வெளியிடும் பாடப்புத்தகங்கள்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடமாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ். போன்ற மதிப்பிற்குரிய தேர்வுகளை எழுதுபவர்களும்கூட என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களைத்தான் படித்துத் தயாராவார்கள்.

ஆறாம் வகுப்புக்கு 'இந்தியாவும் உலகமும்' என்ற புத்தகத்தையும் பதினோராம் வகுப்புக்கு, 'பண்டைய இந்தியா', 'இன்றைய இந்தியா', 'மத்திய கால இந்தியா' என்ற மூன்று புத்தகங்களையும் கடந்த ஆண்டு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டபோதே சலசலப்பு கிளம்பியது.

சமீபத்தில் ஏழு, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான மூன்று வரலாற்றுப் புத்தகங்கள் வெளியாக.. அவை லேட்டஸ்ட் புயலுக்குக் காரணமாகி விட்டன.

சென்னையில் 'சுயமரியாதை இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில் கடந்த சனிக்கிழமை கூடிய கல்வியாளர்கள் கூட்டம், இந்தப் புத்தகங்களை கடுமையாக கண்டித்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜெகதீசன் பேசும்போது, "வரலாற்றை திரித்து எழுதுவது புதிதல்ல. ஆனால், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு தங்களின் நோக்கத்துக்காக வேண்டுமென்றே இதை செய்யத் தொடங்கியிருக்கிறது. உண்மைகளை மறைப்பது, இடைச் செருகல் செய்வது, தீர்மானமான சில உண்மைகளை மேலோட்டமாக மழுப்புவது என்று மூன்று விதமான தவறுகள் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் நடந்திருக்கிறது.

'இந்திய வரலாற்று காங்கிரஸ்' என்ற அமைப்பு எழுபது ஆண்டுகளாக இருக்கிறது. வரலாற்றில் எது உண்மை, எது தவறு என்று தீர்மானிக்க முழுத் தகுதியுள்ள அமைப்பு அதுதான். அந்த அமைப்பு, இந்தப் புத்தகங்களை முழுமையாக நிராகரித்துள்ளது. வகுப்பறைகளில் இதுபோன்ற திரிபுகளை அனுமதிப்பது, பெரும் கலாசார கலவரத்தையே உருவாக்கிவிடும்" என்றார்.

அதற்குப் பிறகு பேசிய பேச்சாளர்கள் அனைவரும், இந்த புத்தகங்களில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டார்கள்.

"பி.ஜே.பி. அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தங்களது ஆட்களைப் புகுத்தியது. தங்கள் கொள்கைக்கு விரோதமான விஷயங்கள் என்பதால், 41 தகவல்களை என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் இருந்து நீக்கினார்கள். அடுத்து பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவிகளை வைத்து புதிய புத்தகங்களை எழுத வைத்தார்கள். அபத்தமான இந்த புத்தகங்களில் ஆபத்தான பல விஷயங்கள் இருக்கின்றன" என்றார் சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் அ. மார்க்ஸ்.

"முதல் சுதந்திரப் போராட்டத்தில் தொடங்கி (1857), நவீன இந்திய வரலாறு வரை எழுதியிருக்கும் நூலாசிரியர் 1954-ம் ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறார். அதற்குப் பிறகு எழுதினால், அவர்களுக்கு பிடிக்காத நேரு பற்றிச் சொல்ல வேண்டும். அதற்காகவே வரலாற்றை அத்துடன் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், 96-ல் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் உட்கார்ந்தது பற்றி இந்தப் புத்தகத்தில் வருகிறது. முந்தைய பி.ஜே.பி. ஆட்சி கவிழ்ந்தது பற்றி சொல்லும்போது, 'துரதிர்ஷ்ட வசமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடிய வில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நடுநிலையாக வரலாற்றைச் சொல்லவேண்டிய புத்தகத்தில் 'துரதிர்ஷ்ட வசமாக' என்ற தனி மனித உணர்வு தேவையா?

தனிநபர் சத்தியாக்கிரகம் பற்றிச் சொல்லும் போது, முதல் சத்தியாக்கிரகி வினோபாபாவே என்று இருக்கிறது. அதற்கு பிறகு வரிசையாக வரும் தலைவர்களின் பெயர்களில் நேரு இல்லை!

நேரு பெயரை மறைக்கும் இந்த புத்தகங்கள் காந்தியையும் கொச்சைப்படுத்துகின்றன. 'கோபால கிருஷ்ண கோகலேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்ட காந்தி, 1915-18 ஆண்டுகளில் இந்திய அரசியலுக்காக எந்தப் பங்கையும் ஆற்றவில்லை' என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவின் சூழல் எப்படியிருக்கிறது என்று காந்தியை ஆய்வு செய்யச் சொல்கிறார் கோகலே. இதற்காக காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்த காலகட்டத்தில் காந்தி சும்மா இருந்தார் என்று சொல்ல முடியாது. பீகார், குஜராத், அகமதாபாத் ஆகிய மூன்று இடங்களில் நடந்த போராட்டத்துக்கு காந்திதான் தலைமை வகித்தார்.

இப்படி பி.ஜே.பி-க்கு யார் யாரெல்லாம் பிடிக்காத தலைவர்களோ அவர்களை கொச்சைப்படுத்தி பாடப்புத்தகங்களை தயார் செய்திருக்கிறார்கள்" என்றும் சொன்னார் அ.மார்க்ஸ்.

இந்தக் கூட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் வீ.அரசு பேசினார்.

"சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றித்தான் இதுவரை படித்திருக்கிறோம். ஆனால், இதை 'சிந்து-சரஸ்வதி நாகரிகம்' என்று பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள். சரஸ்வதி நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் ஒன்று. வரலாற்றை உறுதியான ஆதாரங்களை வைத்து எழுத வேண்டுமே தவிர, சில நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதக் கூடாது.

இந்தியாவைப் பலவீனப்படுத்தியவர் அசோகர் என் றும், மத நல்லிணக்கத்தை உருவாக்கப் பாடுபட்ட அக்பரை 'தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்' என்றும் எழுதுகிறார்கள். அடுத்தகட்டமாக மதரீதியான நேரடிப் பிரசாரமும்கூட அடுத்த ஆண்டு புத்தகத்தில் வந்துவிடும் போலிருக்கிறது" என்று முடித்தார் அரசு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாதிக் பேசும்போது,

"ஒன்பதாம் வகுப்புக்கான 'இன்றைய இந்தியா' புத்தகத்தின் முதல் பதிப்பில், காந்தி கொலை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இரண்டாம் பதிப்பில், 'வழிபாட்டுக் கூட்டம் ஒன்றுக்குச் செல்லும் வழியில் நாதுராம் கோட்ஸே என்பவ ரால் காந்தி கொல்லப்பட்டார்' என்று போகிற போக்கில் ஒப்புக்குச் சேர்த்திருக்கிறார்கள். காந்தி படுகொலை என்பது இவ்வளவு சுருக்கமாக தாண்டிப் போக வேண்டிய வரலாற்று நிகழ்வா? விட்டால், 'காந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்' என்றுகூட அடுத்த பதிப்பில் எழுதிவிடுவார்கள்" என்ற வேதனைப்பட்ட சாதிக்,

"இதையெல்லாம் தட்டிக் கேட்டு ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள் சிலர். நாமும் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டுவோம். வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் நல்ல தீர்ப்பு வரவில்லை என்றால், தெருவில் இறங்கி நான் போராடப் போகிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டார்.
என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டிருக்கும் ஏழு வரலாற்றுப் புத்தகங்களிலும் என்னென்ன பிழைகள், திரிபுகள் இருக்கின்றன என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இதுபற்றி ஆராய்ச்சி செய்ய, தமிழகக் கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப் பவும் தயாராகிறது.

இதற்கிடையில் இந்தப் புத்தகங்களில் வரலாற்றுத் திரிபு எதுவும் செய்யப்பட வில்லை என்று வாதிடவும் கல்வியாளர்களிலேயே இன்னொரு தரப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.

ப. திருமாவேலன்
படங்கள்: பொன். காசி

நன்றி: ஜூனியர் விகடன் 31-12-03